cc

(28) அதுதான் பண்பாடு... அப்புறம் உடன்பாடு!

Advertisment

தினைந்து வருடங்களாக என் மகாலிங்கபுரம் அலுவலகத்துக்கு அடுத்த வீட்டில் வசித்துவந்தார் கவிஞர் வாலி அவர்கள். வழக்கமான ஒரு வணக்கம், ஒரு புன்முறுவல். சில வருடங்களாக இப்படித்தான் நகர்ந்தது எங்கள் பழக்கம். இருவருமே படு பிசியாக வேலை செய்துகொணடிருந்த காலகட்டம். அப்போது எனக்கு திருமணமாகவில்லை.

தினமும் படப்பிடிப்பு முடித்து வந்ததும், அரைமணி நேரம் மொட்டைமாடியில் சிலம்பு சுத்துவேன். அதன்பின் குளித்து சாப்பிட்டுவிட்டுப் படுப்பேன். அப்படி ஒரு இரவு சிலம்பு சுற்றிக்கொண்டிருக்கும்போது... வாலி சார் வீட்டுக்கு ஒரு அம்பாசிடர் காரில் நாலைந்து முரட்டுத் தோற்றமுள்ளவர்கள் வந்திறங்கி வாலி ஸார் வீட்டு அழைப்பு மணியை அடித்தார்கள்.

வாலி சாரின் மனைவியவர்கள் ரமணதிலகம் கதவைத் திறந்தார்கள்.

ஒரே ரகளை... அப்போதுதான் புரிந்துகொண்டேன், வாலி ஸார் வீட்டில் இல்லை என்பதை.

Advertisment

வந்தவர்கள் போவதாக இல்லை. நிலைமை மோசமாவதை கண்டுகொண்ட நான், மொட்டை மாடியிலிருந்து ஜன்னல்களைப் பிடித்து கீழே குதித்து கையில் இரு கம்புகளுடன் போனேன். என் தலையீட்டை விரும்பாத அவர்கள், என்னைத் தாக்க முற்பட் டார்கள். அதைத் தடுத்து இரு கம்புகளாலும் படைவீச்சு வீசி அவர்களை சிதறி ஓடவைத்தேன். காரைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை.

உடனே போலீசுக்கு போன்பண்ணி சேதி சொன்னேன். பின்னர் நான் வீட்டுக்குப் போய்விட்டேன்.

மறுநாள் காலை அலுவலகத்துக்கு நான் வரும்போது... என் அலுவலகம் பூட்டி யிருந்ததால் போர்டிகோவில் ஒரு நாற்காலியைப் போட்டு வாலி ஸார் அமர்ந்திருந்தார். நான் வண்டியை நிறுத்திவிட்டு, "என்ன வாலி ஸார், இங்கே?'' என கேட்டபடி, அவர் அருகே போக... அவர் என்னைக் கட்டிப்பிடித்து "எங்க காம்பவுண்ட் ராஜகுமாரன் நீர்தான் ஓய்...'' எனச் சொல்லி நன்றி தெரிவித்தார். அத்தோடு நிறுத்தாமல், "நமக்காக இவ்வளவு அக்கறையோட இருக்கிற தம்பி, ஏன் உங்களைப் பாட்டெழுதக் கூப்பிடறதில்லேன்னு என் சம்சாரம் கேட்டார் ஓய்'' என்றார்.

"நாளைக்கு கம்போசிங் உட்காரலாம்'' என்றேன்.

Advertisment

மறுநாள் சந்திரபோஸை வரவழைத்து மியூசிக் போடச் சொல்லி, வாலி ஸாரை எழுதச் சொன்னேன். "என்ன சிக்சுவேஷன்' எனக் கேட்டார்.

"நேற்றிரவு நடந்தது போல் ஒரு நிகழ்வு. என் இடத்தில் நாயகன். என் குணாதிசயம் போல்... உதாரணமா "நானா வம்புக்கு வரமாட்டேன்' என இருக்கலாம்'' என்றேன்.

cc

"பொருத்தமா இருக்கே'' என்று சொன்னவர், பல்லவியை இப்படிச் சொன்னார்.

"நானா வம்புக்கு வரமாட்டேன்

அதுதான் பண்பாடு

தானா வந்தா விடமாட்டேன்

அப்புறம் உன்பாடு...''

இதில் சிவாஜி ஸார் நடிப்பதாக ஏற்பாடு. அது நடக்கவில்லை.

பின்னர் நான் எழுதி இயக்கிய "ஏமாறாதே ஏமாற்றாதே' படத்தில் விஜயகாந்த் பாடுவதாக வைத்தோம்.

அதன்பின் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றிக் காணிக்கையாக "மாங்குடி மைனர்' படத்தை எடுத்தேன். அதிலும் வாலி அவர்களை அழைத்து "எம்.ஜி.ஆர். டாலரை கழுத்தில் மாட்டி யிருக்கும் நாயகன் பாடும் பாட்டு ஒன்று வேண்டும். அதில் அண்ணா வேண்டும்... எம்.ஜி.ஆரின் தேர்தல்களுக்கு பயன்படும் பாடலாகவும் இருக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டேன்.

அவர் 76இல் எழுதிய அந்தப் பாடல் இன்றுவரை ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

"அண்ணா நீங்க நெனச்சபடி நடந்திருக்கு

புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு...'

என்ற பாடல்தான் அது.

அதன்பின் என் படங்களில் வாலி ஸாô பல பாடல்களை எழுதினார்.

அடுத்து "தனிக்காட்டு ராஜா' படம் ஆரம்பிக்கும் சமயம் வாலி ஸாருக்கும் இளையராஜாவுக்கும் இடையில் சிறு மனக்கஷ்டம் இருந்ததனால் சிலகாலம் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

ss

இருவருமே நல்லவர்கள்... திறமைசாலிகள். அதனால் அவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பிய நான், ராஜாவிடம் சென்று பேசினேன்... இணக்கம் ஏற்பட்டது. கம்போசிங்கை ஆந்திராவிலுள்ள ராமாநாயுடு அவர்களின் ஊரான "காரஞ்சேடு' என்ற ஊரில் வைத்தோம். நாயுடு ஸாரின் கல்யாண மண்டபத்தில் ஏழு நாட்கள் தங்கி ஆறு பாடல்களையும் எழுதி முடித்து... சென்னை திரும்பினோம். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

அதன்பின் வாலி ஸார் சொந்த வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார். ஆனாலும் நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்க செய லாளராக இருந்தபோது... அவரை பையனூர் அழைத்துப் போய், நாம் உருவாக்கிய கலைஞர் திரைப்பட நகரில் ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்தி னோம். என்னால் மறக்க முடியாத மாமனிதர்களில் வாலிபக் கவிஞர் வாலியும் ஒருவர்.

கவிஞர் மு.மேத்தா இன்று "கலைஞர் கலை உலக வித்தகர் விருது' பெற்றிருக்கிறார். அவரை திரைப்படப் பாடலாசிரியராக நான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

"அவள் பகிர்ந்துகொண்டவள் அல்ல...

அறியாமல் பறிகொடுத்தவள்'

லிஅகலிகை பற்றி இப்படி எழுதிய புதுக்கவிதை மன்னரே... கவிஞர் மு.மேத்தா அவர்கள். அவருக்கு கலையுலக வித்தகர் விருது, முதல்வரால் வழங்கப்பட்டது.

முதல்முதலில் கவிஞர் மு.மேத்தாவை என் அலுவலகம் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவர் புலவர் இந்திராகுமாரி அவர்கள். அப்போது அவர் மாநிலக் கல்லூரி யில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதே தினம் இந்திரா குமாரி, புகழேந்தி தங்கராஜ் என்ற மாநிலக் கல்லூரி மாணவரையும் அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அம்மையார் ஒரு படம் தயாரிக்க விரும்பி, என் இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர் களின் சிபாரிசோடு வந்திருந்தார். மறுக்க முடியுமா? ஆனால் புலவர் இந்திரா குமாரி யுடன் வந்தவர்கள் கவிஞர் மேத்தாவும், புகழேந்தியும். வித்தியாசமான ஒரு கதையை இவர்களுக்கு செய்வதென முடிவு செய்தேன்.

இக்கதையின் வசனங்களை அம்மையார் புலவர் இந்திராகுமாரியையே எழுத வைத்தேன். கவிஞர் மு.மேத்தா அவர்களை இரு பாடல் களை எழுத வைத்தேன். மீதப் பாடல்கள் கவி யரசு வைரமுத்து. இசை, இசைஞானி இளைய ராஜா. புகழேந்தி தங்கராஜ் என் உதவியாளராக இணைந்தார். படத்தின் பெயர் "நீ தொடும் போது'. பாடகியாக லக்ஷ்மி, காதலனாக ரகுவரன், கணவனாக ராஜேஷ் நடித்தனர்.

அதன்பின் கவிஞர் மேத்தா அவர்கள் என் கம்பெனியில் பல பாடல்கள் எழுதினார். "மைக்கேல்ராஜ்', "கைநாட்டு' போன்ற பல படங்களின் அனைத்துப் பாடல்களையும் அவர் எழுதினார்.

எங்கள் "தமிழர் அய்க்கிய முன்னேற்ற கழக'த்தின் தலைவரானார். பல போராட் டங்களை முன்னின்று நடத்தினார். தற்போது கலைஞர் கலை உலக வித்தகர் விருது பெற்று உயர்ந்து நிற்கிறார்.

ஒருபுறம் தேள் கொட்டியது... இன்னொரு புறம் தேனாக இனித்தது.

அந்த அனுபவம்...

(திரை விரியும்...)

cc